Saturday, December 22, 2018

3. கம்பரும் கண்ணதாசனும்


கம்பரின் பாதிப்பில்லாமல் எந்தத் தமிழ்க் கவிஞரும் இருக்க முடியாது. கண்ணதாசனும் இதற்கு விலக்கல்ல.

கம்பரின் சில சொற்களை எடுத்துக் கொண்டு அவற்றையோஅவை  போன்ற சொற்களையோ தன் பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார் கண்ணதாசன்இது ஒரு வகை

இன்னொரு வகை கம்பரின் கவிதைகளின் பொருளைப் பயன்படுத்துவது

இந்த இரண்டு வகைகளிலும், நான் கவனித்த சில உதாரணங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

  1  1) கொடிமலர்என்ற படத்தில்
கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
சுவைக் கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகி
என்ற பாடலை (இசை: எம் எஸ் விஸ்வநாதன்) என் சிறு வயதில் கேட்டபோது,
சுவைக் கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகிஎன்ற சொற்றொடர் மிக அற்புதமாக அமைந்திருக்கிறதே!’ என்று வியந்திருக்கிறேன். அப்போது கண்ணதாசன் பற்றி எனக்கு அவ்வளவு awareness கிடையாது

இந்தப் பாடல் கண்ணதாசன் எழுதியது என்ற சிந்தனை கூட அப்போது வந்திருக்காது என்று நினைக்கிறேன். ஏதோ ரேடியோவில் பாட்டைக் கேட்டு விட்டு நன்றாக இருக்கிறதேஎன்று நினைத்துக் கொள்வதோடு சரி. பாடல் வரிகளால் ஈர்க்கப்படுவது கூட எப்போதாவது நடப்பதுதான்.

பல வருடங்கள் கழித்து, கம்பராமாயணத்தில் ஒரு பாடலைப் பார்த்தபோது அதில் இந்தச் சொற்றொடர் வந்திருப்பதைக் கண்டதும் வியப்பு ஏற்பட்டது.

ராவணன் இறந்த பின் அவன் மனைவி மண்டோதரி போர்க்களத்துக்கு வந்து புலம்புகிறாள். மண்டோதரி புலம்பல் என்று சில பாடல்கள் ள்ளன.

அவற்றில், ‘வெள்ளெருக்கஞ்சடைமுடியன்என்ற பாடலின் கடைசி இரு வரிகள் வருமாறு:

கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?’

(சீதையை ராவணன் தன் மனச் சிறையில் வைத்திருக்கும் இடத்தை ராமணின் அம்பு ராவணன் உடல் முழுவதும் தேடியது. இறுதியில் அந்தக் காதல் ராவணனின் உயிரில் இருப்பதைக் கண்டு, அவன் உயிரை எடுத்து, அவன் மனச் சிறையிலிருந்து சீதையை மீட்டது.)

இந்த சொற்றொடரைத்தான் கண்ணதாசன் எடுத்தாண்டிருக்கிறார். ‘சுவைஎன்ற ஒரு வார்த்தையைச் சேர்த்து சுவைக் கள்ளிருக்கும்என்று எழுதி இருக்கிறார்

2)   ராமன் தெருவில் உலா வரும்போது பெண்கள் அவனைப் பார்த்து அவன் அழகை வியக்கின்றனர். அவன் தோளைக் கண்டவர்கள் அதன் அழகில் மயங்கி தோளையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்அவர்கள் பார்வை மற்ற இடங்களுக்குப் போகவில்லை

அது போல் அவன் பாதங்களையோ, கைகளையோ, கண்களையோ பார்த்தவர்களும் அதனதன் அழகிலேயே மயங்கி நிற்கின்றனர். யாருமே ராமனை முழுவதும் பார்க்கவில்லையாம்.

பரம்பொருளை யார் முழுதாக அறிய முடியும்?’ என்று கூறுவதுடன். 'இது பற்பல சமயத்தினரும் கடவுளை ஒவ்வொரு உருவில் பார்ப்பது போல் இருக்கிறது’ என்று கூறி முடிக்கிறார் கம்பர்.

தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான்
உருவுகண் டாரை ஒத்தார்.

இந்தப் பாடலின் துவக்க வரியான ‘தோள் கண்டார் தோளே கண்டார்’ என்ற வரியை எடுத்துக் கொண்டு கண்ணதாசன் எழுதிய பாடல்வீர அபிமன்யுபடத்தில் வரும்,

தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்

என்ற பாடல் (இசை: கே.வி. மகாதேவன்).
தோள் கண்டேன்என்ற துவக்கம் மட்டும்தான் கம்பரிடம் கடன் வாங்கியது.

இங்கு பொருள் சிறிது வேறுபடுகிறது. கம்பர் பாடலில், தோள் கண்டார் தோளை மட்டுமே கண்டார் என்று பொருள் வருகிறது.. இங்கேதோளே கண்டேன்என்பதற்குஇப்படி ஒரு (ழகான) தோளா?’ என்று பொருள் கொள்ள வேண்டும்.

  33)  ராமன் விஸ்வாமித்திரரோடு கானகத்துக்குச் சென்று, அங்கு தாடகை முதலிய அரக்கர்களைத்தான் வில்லின் ஆற்றலால் கொன்று முனிவர்களைக் காக்கிறான். 

   பிறகு கானகத்தில் நடந்து வரும்போது, ராமன் தன் பாதத்தை ஒரு கல்லின் மீது வைக்க, அந்தக் கல்லிலிருந்து சாபம் நீங்கி அகலிகை வெளிப்படுகிறாள்

அப்போது விஸ்வாமித்திரர் சொல்வதாகக் கம்பர் கூறுவது.

கை வண்ணம் அங்கு கண்டேன்
கால் வண்ணம் இங்கு கண்டேன்.

கை வண்ணம் என்பது கையில் வில் பிடித்து தாடகையைக் கொன்றது.

கால் வண்ணம்என்பது கல்லைக் காலால் மிதித்து அகலிகை சாபம் நீக்கியது.
.
முழுப்பாடல் இதோ:
.
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்கு கண்டேன்;
கால் வண்ணம் இங்கு கண்டேன்.

இங்கே வண்ணம் என்ற சொல்லை 8 முறை பயன் படுத்தியுள்ள  கம்பர், இந்தச் சொல்லை 4  பொருட்களில் பயன்படுத்தி  உள்ளார்.

வண்ணம் – போல்
இவ்வண்ணம் – இவ்வாறு, இது போல்

வண்ணம் – போது, பின்  
நிகழ்ந்த வண்ணம் – நிகழ்ந்த பின்

வண்ணம் – வழி, நிலை
உய்வண்ணம் – உய்யும் வழி, துயர் வண்ணம் – துயர நிலை

வண்ணம் – நிறம்
மைவண்ணத்து - இருள் போன்ற கருப்பு நிறத்து (இருள் தீயதைக் குறிக்கும் என்பதால் தீமை செய்யும் அரக்கியான தாடகையைக் குறிக்க மைவண்ணம் என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார் கம்பர்).
மழை வண்ணத்து – மேகம் போல் கருப்பு  நிறம் கொண்ட, (மழை கொடுக்கும் மேகம் என்பதால் இது நல்ல கருப்பு)

(இன்னொரு இடத்தில், கம்பர் ராமனை வர்ணிக்கும்போது ‘மையோ மரகதமோ, மரிகடலோ, மழை முகிலோ..’ என்று பல கருப்பு நிறப் பொருட்களைக் குறிப்பிடுகிறார். இங்கு மை, மழை என்று இரு விதமாகக் குறிப்பிடுவதால், மை என்பதற்கு ஒப்பீட்டு முறையில் negative ஆகப்பொருள் கொள்ளப்படுகிறது)

வண்ணம் – திறமையான செயல்
கைவண்ணம் – கையால் செய்த சாதனை
கால் வண்ணம் – காலால் புரிந்த சாதனை

கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்.

இங்கு வண்ணம்என்ற சொல் ஆற்றல் என்ற பொருளில் பயன் படுத்தப்பட்டுள்ளது. இப்போது கூட ஒருவர் நன்றாக சமையல் செய்தால் அதை அவர் (அவள்) கை வண்ணம் என்று சொல்கிறோம்.

வண்ணம் என்றால் அற்புதம் அல்லது விசித்திரம் என்றும் பொருள் கொள்ளலாம். 

இங்கு என்ன விசித்திரம்? 

பொதுவாக அன்போடு அணைப்பதற்கும், ஆக்கபூர்வமான செயல்களுக்கும் பயன்படக்கூடிய கையால் அரக்கர்களை அழித்தான் ராமன். 

காலால் மிதித்தால் பொருட்கள் சிதைந்து போகும். ஆனால், இங்கு ராமன் கல்லைக் காலால் மிதித்து அதைப் பெண் ஆக்கினான். இதுதான் விந்தை அல்லது அற்புதம்!  

இந்தப் பாடலை ஒட்டிக் கண்ணதாசன் எழுதிய பாடல்பாசம்படத்தில் (இசை: விஸ்வநாதன்- ராமமூர்த்தி) வரும்

பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு
வாடுகிறேன்.

இங்கேவண்ணம்என்ற சொல் முதல் வரியில் நிறம் என்ற பொருளிலும், இரண்டாவது வரியில் போல்என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்து. இந்தப் பாடலில் வண்ணம் என்ற சொல் பல முறை வருகிறது.

4. இனி இரண்டாவது வகைக்கு வருவோம். அதாவது கம்ப ராமாயணப் பாடலின் பொருளைப் பயன்படுத்தி எழுதப்பட்ட பாடல்.

ராமனை காட்டுக்குப் போஎன்று கைகேயி சொன்னதைக் கேட்டு இலக்குவன் மிகுந்த கோபம் கொண்டு தசரதனையும், கைகேயியையும் கடுமையாகப் பேசுகிறான்.

அப்போது, இலக்குவனைச் சமாதானப்படுத்த ராமன் சொல்வதாக வரும் கம்பராமாயணப் பாடல் இது.

நதியின் பிழையன்று நறும்புனலின்மைஅற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த!
விதியின் பிழை இதற்கு நீ என்னை வெகுண்டது என்றான்

பொருள்: 'நதியில் நீர் இல்லாவிட்டால் அது நதியின் பிழை இல்லை. அது போல் இது அரசன் பிழை இல்லை. நம்மைக் காத்து வளர்த்த கைகேயியின் சிந்தனையின் பிழை இல்லை. அவள் மகன் பரதன் பிழையுமில்லை. விதியின் பிழை. இதற்கு நீ ஏன் கோபம் கொள்கிறாய்?’ என்றான் ராமன்.

இந்தக் கருத்தை மிக எளிதாக அப்படியே ஒரு பாடலில் எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறார் கண்ணதாசன்.

தியாகம் (அமானுஷ் என்ற ஹிந்திப் படத்தின் தமிழ் வடிவம்) படத்தில் வரும்நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டுஎன்ற பாடலில் (இசை: இளையராஜா) வரும் வரிகள்.

நதி வெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு ஏதம்மா?

இவையெல்லாம் காப்பி அடிப்பது இல்லை. ஓரிரு சொற்களையோ, கருத்துக்களையோ எடுத்துக் கொண்டு அவற்றை அஸ்திவாரமாகக் கொண்டு அவற்றின் மீது தன் கவி மாளிகையை எழுப்புவது.

கண்ணதாசன் எழுப்பிய மாளிகைகள் அழகும், கம்பீரமும் நிறைந்தவைகளாக காலத்தால் அழியாமல் என்றும் நிலைத்து நிற்பவை.