Saturday, July 1, 2017

2. அந்தகக் கவி

வீரராகவனுக்குப் பிறவியிலேயே பார்வை இல்லை.
.
கல்வி கற்கும் வயது வந்ததும், வீட்டிலேயே கல்வி கற்பிக்க ஒரு தமிழ் ஆசிரியர் நியமிக்கப்பட்டார். அவர் வீரராகவனின் முதுகில் தமிழ் எழுத்துக்களை எழுத வீரரகவன் தொடு உணர்ச்சி மூலம் தமிழை நன்கு கற்று, கவி பாடும் அளவுக்குத் திறமை பெற்று, அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்று அழைக்கப்பட்டார்.

"தன்னெஞ்சமேடெனக் கற்றானொரு முத்தமிழையுமே" என்று இவரைப் பற்றி ஒரு செய்யுளில் குறிப்பிடப் பட்டுள்ளது. நாம் பத்தகங்கள் குறிப்பேடுகள் ஆகியவற்றின் துணை கொண்டு படித்ததை இவர் தன் நெஞ்சம் என்ற ஏட்டை மட்டுமே வைத்துப் படித்து விட்டார்!

 உணர்வு மூலம் புரிந்து கொண்டதும் இவர் நெஞ்சுதான், உணர்வு மூலம் கற்றவற்றைத் தன்னுள் இருத்திக் கொண்டதும் இவர் நெஞ்சுதான், தேவைப்படும்போது முன்பு கற்று இருத்திக் கொண்டதை வெளிக்கொண்டு வந்ததும் இவர் நெஞ்சுதான்
 
சிலேடையாகப் பேசுவதிலும், கவி பாடுவதிலும் இவருக்கு ஆர்வம் உண்டு.

இவருக்குத் திருமணம் ஆகிச் சில வருடங்களில் மனைவி இறந்து விட்டார்.

ஒருமுறை மனைவிக்கு வருடாந்தர தவசம் செய்வதற்காக இவர் கடையில் விறகு வாங்கி அதைத் தலையில் சுமந்து கொண்டு போனார்.

வழியில் ஒருவர் "ஏன் தலையில் விறகு சுமந்து போகிறீர்கள்?" என்று கேட்டதற்கு, இவர் "தலைவி திவசம், தலைவிதி வசம்!" என்றார்..

"என் மனைவிக்கு திவசம். என் மனைவி இறந்து அவளுக்கு நான் திவசம் செய்ய வெண்டும் என்பது என் தலைவிதி!" என்று இரு பொருட்களை ஒரே சொற்றொடரில் அமைத்த பதில் இது..

ஓருமுறை இவர் கட்டுச் சோற்று மூட்டையுடன் வெளியே சென்றார். (கட்டுச்சோறு என்பது பெரும்பாலும் இலையில் உணவை வைத்து அதை ஒரு துணியில் சிறு மூட்டை போல்  கட்டப்படும். எனவே இதைக் கட்டுச்சோற்று மூட்டை என்று சொல்வது வழக்கம்.)

மதிய  வேளையில் உணவு உட்கொள்வதற்காக ஒரு குளக்கரையில் கட்டுச் சோற்று மூட்டையை வைத்து விட்டுக் குளத்தில் இறங்கிக்  கைகால் கழுவச் சென்றார். திரும்பி வந்தபோது வைத்த இடத்தில் கட்டுச்சோற்று மூட்டையைக் காணவில்லை.

அங்கே இருந்த ஒரு சிறுவன் இவரிடம் "ஐயா! உங்கள் கட்டுச்சோற்று மூட்டையை  ஒரு நாய் தூக்கிக் கொண்டு ஓடி விட்டது" என்றான்.

அப்போது அவர் ஒரு கவி பாடினார்.

சீராடை யற்ற வைரவன் வாகனஞ் சேரவந்து
பாராரு நான்முகன் வாகனந் தன்னைமுன் பற்றிக்கௌவி
நாராயணனுயர் வாகன மாயிற்று நம்மைமுகம்
பாரான்மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே

பொருள்:
சீராடையற்ற வைரவன் வாகனம் - குறைந்த அளவே ஆடை அணிந்திருக்கும் பைரவனின் வாகனமான நாய்
 பாராரு நான்முகன் வாகனந்தன்னை - உலகைப் படைக்கும் பிரும்மாவின் வாகனமான அன்னத்தை (சாதத்தை)
முன்பற்றிக் கௌவி - வாயால் கௌவிக்கொண்டு
நாராயணனுயர் வாகனமாயிற்று - திருமாலில் வாகனமான கருடன் பறப்பது போல் பறந்தோடி விட்டது.
நம்மை முகம் பாரான் - நம் மீது இரக்கமில்லாத*
மை வாகனன் - காக்கையை வாகனமாகக் கொண்ட அக்கினி பகவான்
வந்தே வயிற்றுனிற் பற்றினனே - என் வயிற்றில் புகுந்து என்னை வாட்டுகிறானே.

*நெருப்பு எல்லாவற்றையும் எரித்து விடும். ஒருவர் முகத்தைப் பார்த்து 'பாவம், இவரை எரிக்காமல் விட்டு விடலாம்' என்று இரக்கம் காட்டாது. பசியும் அப்படித்தான். இதைத்தான் 'நம்மை முகம் பாரான் என்று குறிப்பிடுகிறார் (பேச்சு வழக்கில் 'முக தாட்சண்யம்' என்று சொல்லப்படுவது இந்தப் பொருளில்தான்.).

"பிரும்மாவின் வாகனத்தை பைரவனின் வாகனம் தூக்கி கொண்டு திருமாலின் வாகனம் போல் பறந்து விட்டது. காக்கையை வாகனமாகக் கொண்டவன் இப்போது என் வயிற்றில் புகுந்து வாட்டுகிறான்."

அந்தகக்கவி வீரராகவ முதலியார் பற்றி என் பள்ளிப் பாடத்தில் படித்த தகவல்களை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.